"பாதம் கழுவுதலும் - மனத்தாழ்ச்சியும்"Rev.Fr.R.John Joseph--------------------------------------


அன்பார்ந்தவர்களே!

நம் ஆண்டவராகிய இயேசு, தன்னுடைய உடலிலும் இரத்தத்திலும், தன் சீடர்களுக்கு பங்கு தரும் முன், அவர்களை அதற்காக ஆயத்தம் செய்தார்.

இந்த ஆயத்தம் ஒரு சடங்காகவே, பெரிய வியாழனன்று திருவிருந்துக்கு முன் நடந்தது.

ஒருவர் தேவ கிருபையால் நிரப்பப்பட வேண்டுமாயின், அவர் தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். மனத்தாழ்ச்சியுடையவருக்கே, தேவ கிருபை கிடைக்கும் - 1பேது 5:5.

வானினின்று இறங்கி வந்த மீட்பராகிய இயேசுவை, சொந்தமாக்கிக் கொள்ள, அவரிடமிருந்த தாழ்ச்சியை நாம் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். தாழ்ச்சியுடையவருக்கே மீட்பு.

 • மனத்தாழ்ச்சியை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள் - 1பேது 5:5.
 • இயேசு சாவை ஏற்கும் அளவுக்கு, சிலுவை சாவையே ஏற்கும் அளவுக்கு தம்மையே தாழ்த்திக் கொண்டார் - பிலி 2:6-11.

வாழ்வில் மனத்தாழ்ச்சியோடிருக்க, எப்படி பயிற்சி பெற வேண்டுமென்று, இயேசு ஒரு முன்மாதிரி காட்டினார். தானே, தம் சீடர்களின் பாதங்களில் அமர்ந்து, அந்த அழுக்கடைந்த பாதங்களைக் கழுவி சுத்தப்படுத்தினார்.

உங்கள் போதகரும், ஆண்டவருமான நானே, இதை செய்தேனென்றால், நீங்களும் இதைப்போலவே, ஒருவருக்கொருவர் செய்யுங்கள்.

அப்படி செய்து வருவீர்களானால்:

 • உங்கள் தற்பெருமை, அகந்தை எல்லாம், மாய்ந்து போகும்.
 • சுயம் அழியும்.
 • நிபந்தனையின்றி மன்னிக்க, அன்பு செய்ய, பிறரோடு இணைந்து வாழ, தடையாயிருக்கின்ற “நான் என்ற திமிர்” ஒழிந்து போகும்.
 • பிறரை , அவர்களுடைய பெலவீனங்களோடும், குறைபாடுகளோடும் ஏற்று வாழ, மன வலிமை கிடைக்கும்.
 • வீட்டிலும், இதையே செய்து வருவீர்களானால், கணவன், மனைவி, பிள்ளைகள், உடன்பிறப்புகள், ஒருவர் மற்றவர்களுடைய பெலவீனங்களைப் பொறுத்து, அனைவரையும் அன்பு செய்து வாழ, மன வலிமை கிடைக்கும்.
 • இல்லங்களில் ஆட்சி செய்யும், குழப்பத்தின் ஆவிகள், சண்டையின் ஆவிகள் எல்லாமே, ஓடிப்போகும்.
 • ஒவ்வொருவரும் இயேசுவின் சாயலாய் மாற, சமாதானத்தின் தேவன், உள்ளத்திலும் இல்லத்திலும் வாசம் செய்வார். இதனால், இயேசுவின் பரிசுத்த உடலோடும், இரத்தத்தோடும், நமக்கு பங்கு கிடைக்கும்.


தியானிக்க வேண்டிய வேதபகுதி:


முதல் வாசகம்: எசா 53:1-12.

இரண்டாம் வாசகம் : பிலி 2:1-11.

மூன்றாம் வாசகம் : யோவா 13: 4-17.


--------------------------------------ஒலிப்பேழை:


( முதலில் ஒலிப்பேழை முன்னுரையைக் கேட்கவும் )
--------------------------------------குடும்பத்தில் பாதம் கழுவும் சடங்கு:


குறிப்பு:

 • தேவைப்படும் பொருட்கள் : பேஸின், பக்கெட்டில் தண்ணீர், குவளை, டவ்வல்.
 • பாதம் கழுவுபவர்கள், வட்டமாக அமரவும்.
 • ஒருவர் தொடக்க ஜெபத்தோடு ஆரம்பிக்கவும்.
 • Script உரையை, ஒருவர் சத்தமாக வாசிக்கவும்.
 • பாதம் கழுவுபவரும், கழுவப்படுபவரும், கீழ்க்காணும் வார்த்தைகளை உச்சரித்து பாதம் கழுவுதல் நடைபெறும்.


கழுவுபவர்:- “என் அன்பு இயேசுவே ! நான் பாதத்தை கழுவும் என் சகோதரியை, அவர்களின் எல்லா குற்றங்குறைகளோடும், பெலவீனங்களோடும், நான் தாழ்பணிந்து ஏற்றுக்கொள்கிறேன்”.


கழுவப்படுபவர்:- “என் அன்பு இயேசுவே! என் பாதத்தை கழுவும் என் சகோதரியை, அவர்களின் எல்லாக் குற்றங்குறைகளோடும், பெலவீனங்களோடும், நான் தாழ்பணிந்து ஏற்றுக்கொள்கிறேன்”.

--------------------------------------பாதம் கழுவும் பாடல்:


குறிப்பு:

 • பாதம் கழுவி முடித்த பின்பு, கீழ்க்காணும் பாடலை, ஒலிப்பேழையில் போட்டு, சேர்ந்து பாடவும்.
 • பின்பு, ஒருவர் .இறுதி ஜெபம் செய்து, பாதம் கழுவும் சடங்கை முடிக்கவும்.ஒருவர் ஒருவரின் பாதம் கழுவ தாழ்ச்சி வேண்டும்

ஸ்னேகம் வேண்டும் பரிசுத்தம் வேண்டும்

உம்மைப் போல் மாற வேண்டும் - இயேசுவே


1. ஒரு கன்னம் அறைந்தால் மறுகன்னம் காட்ட வேண்டும்

தாடியை பிய்ப்போர்க்கு கன்னத்தை தர வேண்டும்

காறி உமிழ்வோர்க்கு முகத்தை அளிக்க வேண்டும்

எல்லாம் ஏற்று உம்மைப் போல் மாற வேண்டும்


2. அநியாய தீர்ப்பிட என்னையே அளிக்க வேண்டும்

சாட்டையால் அடித்திட உடலைத் தர வேண்டும்

முள்முடி சூட்டிட தலையையும் தாழ்த்த வேண்டும்

எல்லாம் ஏற்று உம்மைப் போல் மாற வேண்டும்


3. யூதாசின் முத்தத்தை மகிழ்ச்சியாய் ஏற்க வேண்டும்

ஈட்டியால் குத்தவும் நெஞ்சத்தை தர வேண்டும்

ஆணியால் அறைந்திட கரங்களை விரிக்க வேண்டும்

எல்லாம் ஏற்று, உம்மைப் போல் மாற வேண்டும்


4. அயலாரின் சிலுவையை நானே சுமக்க வேண்டும்

சிலுவையின் பாதையில் பிறரையும் தேற்ற வேண்டும்

எல்லாரும் வாழ்ந்திட என் வாழ்வைத் தர வேண்டும்

எல்லாம் ஏற்று, உம்மைப் போல் மாற வேண்டும்

-------------------------------------- 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.in